நிலம் வாங்கும் போது சரிபார்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? நீங்கள் முதலில் உங்களுக்கு என்று புதியதாக முதன் முதலாக ஒரு நிலம் வாங்குபவரா? அப்படியெனில் நீங்கள் நிலம் வாங்குவதற்கு முன், முதலில் என்ன செய்யவேண்டும்? என்பதை பற்றிதான் இப்பதிவு!
முதலில் நிலம் வாங்கும்போது அந்த நிலம் எதற்காக வாங்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். குடியிருக்க அல்லது வீடு கட்டுவதற்கு என்றால் முதலில் கவனிக்க வேண்டியது அந்த இடம் குடியிருப்பதற்கு, வீடு கட்டுவதற்கு தரமானதாக உள்ளதா? என்பதை தான்.
இதற்கு ஒரு பெரிய உதாரணம் சென்னையை எடுத்துக் கொள்ளலாம், ஏரிகளின் வழித்தடங்கள் ஆக்கிரமித்து நிறைய குடியிருப்புகள் எழுப்பியதன் விளைவை கடந்த சில வருடங்களாகவே அங்குள்ள மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
எனவே, நீங்கள் நிலம் வாங்கும் முன் அந்த நிலம் கட்டுமானத்திற்கு சிறந்த இடமாக உள்ளதா? நீங்கள் கட்டிடம் கட்டும்பொழுது இதை கவனிக்காமல் அடுக்குமாடி குடியிருப்பு கட்டினால் கட்டும்போதே, ‘கட்டிட அழுத்தத்தால்’ நிலம் உள்வாங்கி கட்டிடம் இடிந்து விட வாய்ப்பு உள்ளது.
ஆகவே, குடியிருக்க தகுதியான இடமா என அறிந்துகொண்டு அதை உறுதிசெய்து கொண்டு நிலத்தை வாங்க வேண்டும்.
பத்திரம் சரிபார்த்தல்
ஒரு நிலம் வாங்கும் போது முதலில் சரி பார்க்க வேண்டியது பத்திரம் மற்றும் ஏனைய ஆவணங்கள் சரியாக உள்ளதா? என்று தான்.
முதலில் வாங்கும் இடத்தின் பத்திர நகலை கேட்டுப் பெற்றுக் கொள்ளவேண்டும். பிறகு, அந்த நகலில் உள்ள விபரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா எனச் சரி பார்க்க வேண்டும். நம்மிடம் விற்பவரின் பெயரில் மனை உள்ளதா? அந்த இடத்தின் வில்லங்கச் சான்றை பெற்று, மனை அவருக்கு மட்டும்தான் சொந்தமா? என உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும், அவரின் பெயரிலேயே பட்டா உள்ளதா? எனவும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தும் சரியாக உள்ளது எனில், அடுத்து நான்கு மனை சரியாக உள்ளதா? மனை எண் மற்றும் நான்கு மனைகளின் எண் அனைத்தும் சரியாக உள்ளதா? என்பதையும் சரி பார்க்க வேண்டும். பட்டாலும், பத்திரத்திலும் மனை எண் சரியாக உள்ளதா? என்பதையும் சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாக, மனை அமைந்துள்ள இடத்திற்கு சென்று பத்திரத்தில், பட்டாவில் இருக்கும் மனையின் நீளம், அகலம் குறிப்பிடப்பட்ட அதே அளவு மனை உள்ளதா? ஏதேனும் ஆக்கிரமிப்பு நடைபெற்று உள்ளதா? அல்லது
நிலத்தின் அளவு அதிகமாக காண்பிக்கப்பட்டு உள்ளதா? என நன்கு அளந்து, சரிபார்த்த பின்பு தான் நிலத்தை வாங்க முடிவு செய்ய வேண்டும்.